ஜெயலலிதாவுடன் தன்னை அண்ணாமலை ஒப்பிட்டுப் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து அதன் நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக அக்கட்சியின் ஐடி விங் தலைவர் CTR நிர்மல் குமார் விலகியதைத் தொடர்ந்து, ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன், ஒபிசி பிரிவு மாநிலச் செயலாளர் அம்மு உள்ளிட்டோர் விலகினர். மேலும் இன்று சென்னை மேற்கு மாவட்ட ஐடி விங் உறுப்பினர்கள் 13 பேர் மொத்தமாக விலகியுள்ளனர்.
இந்நிலையில், பாஜக உறுப்பினர்களின் தொடர் விலகல் குறித்து நேற்றைய தினம் அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் கேட்கப்பட்டதற்கு, ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி போல தானும் ஒரு தலைவன் என்றும், அவர்களும் கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது அவர்களின் கட்சியிலிருந்தும் உறுப்பினர்கள் விலகி வேறு கட்சியில் இணைந்தனர் என்றும் அவர் பேசினார். மேலும் பாஜகவினரை இழுத்து திராவிட கட்சிகள் வளரும் நிலைக்கு வந்துவிட்டதாகவும், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்றும் அதிமுகவை மறைமுகமாக வம்பிழுத்தார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”கல் வீசினால் உடைய அதிமுக ஒன்றும் கண்ணாடி அல்ல. அதிமுக ஒரு பெரும் சமுத்திரம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இன்று மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் பலர் விருப்பப்பட்டு வந்து சேர்கின்றனர். விருப்பப்பட்டு சேரும்போது அதை அரசியல் ரீதியில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இருக்கவேண்டும்
அண்ணாமலை தான் அம்மா ஜெயலலிதா போன்ற தலைவர் என்று கூறுகிறார். அதை சொல்வதற்கு யாருக்கும் இந்தியாவில் தகுதியில்லை. அவர் போன்ற தலைவர் இனி பிறக்கப்போவதில்லை. செஞ்சிக்கோட்டை ஏறுபவர்களெல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது” இவ்வாறு கூறினார்.


























