பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட சமூக ஊடகப்பிரிவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவிலிருந்து தினந்தோறும் உறுப்பினர்கள் விலகுவது தொடர்கதையாகிவருகிறது. சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த CTR நிர்மல் குமார் விலகிய விலையில், அவரைத் தொடர்ந்து ஐடி விங் செயலாளராக இருந்த திலீப் கண்ணன் விலகினார். பின், பாஜக ஒபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு விலகினார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையின் தலைமை மீதான அதிருப்தி காரணமாக விலகுவதாக நிர்மல் குமார் மற்றும் திலீப் கண்ணன் தங்களது விலகல் அறிவிப்பில் தெரிவித்திருந்தனர். பாஜகவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகப் பிரிவைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் ஒரத்தி அன்பரசு, துணைத் தலைவர்கள் சரவணன், ராமாபுரம் ஸ்ரீராம் உள்ளிட்ட 13 பேர் பாஜகவிலிருந்து விலகுவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஒரத்தி.அன்பரசு, ”கட்சியில் சிலகாலமாக அசாதாரண சூழல் நிலவி வந்த நிலையில், ஒரு சில தினங்களாக பலர் என்னைத் தொடர்பு கொண்டு சில விளக்கங்களைக் கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது. ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது.
தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம் ஆகவே இதை செய்கிறேன். நிச்சயமாக தி.மு.க-வில் இணையமாட்டேன். திமுக-வை விமர்சிக்கவே பாஜக-வில் இருந்து விலகுகிறேன். அன்புக்குரிய தலைவர் திரு C.T.R. நிர்மல் குமார் அவர்களுடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழக பாஜகவிலிருந்து அதன் நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



























