கணவன்மார்களுடன் விவாகரத்தான பெண்களை சேர்ந்துவாழும்படி தாலிபன்கள் வற்புறுத்துவதால் ஆப்கன் பெண்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபன்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் ஆட்சியை கையிலெடுத்த நாளிலிருந்தே பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்துவருகின்றனர். அங்கிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், இவர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறியதைத் தொடர்ந்து பெண்கள் உட்பட அந்நாட்டினர் பெரும்பாலானோர் அங்கிருந்து வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றனர்.
பள்ளிகளில் பயிலும் பெண்கள் ஆண்களைப் பார்க்கக்கூடாது, பெண்கள் உயர்கல்வி பயிலக்கூடாது, வெளியிடங்களுக்கு ஆண் துணையின்றி பெண்கள் செல்லக் கூடாது, புர்கா எனப்படும் உடலை மறைக்கும் ஆடை அணியாமல் எங்கும் செல்லக்கூடாது என்பது போன்ற தீவிரமான அடக்குமுறைகளால் தாலிபன்கள் ஆப்கன் பெண்களை தொடர்ந்து அடிமைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கணவர்கள் துன்புறுத்தியதாகக் கூறி கடந்த ஆட்சியில் விவாகரத்து பெற்ற பெண்கள் மீண்டும் அந்தக் கணவர்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று தாலிபன்கள் பெண்களைக் கட்டாயப்படுத்தும் கொடூரம் அங்கே அரங்கேறிவருகிறது. இதனால் அங்கு வசிக்கும் பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் இதிலிருந்து தப்பிக்க பல பெண்கள் தலைமறைவு வாழ்க்கை வாழத் துவங்கியுள்ளனர்.
மதுவுக்கு கணவன் அடிமையாகியிருந்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்தாலோ மட்டும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விவாகரத்து செல்லுபடியாகும் என்று தாலிபன்களால் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 10ல் 9 பெண்கள் தங்கள் கணவர்களால் கொடுமைக்கு ஆளாவதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


























