சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், அப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் 2021ம் ஆண்டு அமேசான் ஒடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னை பகுதியில் குத்துச்சண்டை வீரர்களாக கோலோச்சிய இருவரின் வாழ்க்கை மற்றும் அதுசார்ந்த அரசியலை அக்மார்க் பா.ரஞ்சித் பாணியில் அலசிய இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது.
கதாபாத்திர அமைப்பு, திரைக்கதை, காட்சியமைப்பு, இசை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேர்த்தியான விதத்தில் உருவான இப்படம் ஆர்யா, பா.ரஞ்சித், பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்டோருக்கு முக்கியப் படமாக அமைந்தது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக திடீர் அறிவிப்பு நேற்று வெளியானது.
இதுகுறித்த அறிவிப்பை அப்படத்தின் கதாநாயகன் ஆர்யா ட்விட்டரில் பதிவிடவே ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடத் துவங்கினர். சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முக்கியக் காரணமாக இருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அவர் இசையமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மேலோங்கியிருந்தது.
பாடகர் மற்றும் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவின் புகைப்படம், ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்தில், அவரது சமூகத்தை காரணம் காட்டி இடம்பெறாதது குறித்த சர்ச்சையின் காரணமாக ’அட்டகத்தி’ படத்திலிருந்து தொடர்ந்துவந்த ’பா.ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன்’ கூட்டணியில் விரிசல் விழுந்தது. பா.ரஞ்சித்தின் ’நட்சத்திரம் நகர்கிறது’ பட்த்திற்கு தென்மா இசையமைத்தார்.
இதனிடையே, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரை 2 குறித்த பதிவை ட்விட்டரில் ஷேர் செய்து ”வானம் விடிஞ்சிருச்சி காசு டா மேளத்த” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சார்பட்டா பரம்பரை படத்தின் 2ம் பாகத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்று வலைதள வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆயினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இறுதி அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.


























