பாஜக ஐடி விங் செயலாளர் பொறுப்பிலிருந்து திலீப் கண்ணன் நேற்றைய தினம் விலகிய நிலையில், இன்று அவர் அதிமுகவில் இணைந்தார்.
தமிழ்நாடு பாஜகவில் சில தினங்களாக அதிரிபுதிரி மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. போனவாரம் வரை அண்ணாமலை தான் வருங்கால நம்பிக்கை, அண்ணாமலை தான் தமிழ்நாட்டின் வருங்கால தலைவர் என்று கூறிவந்தவர்கள் தற்சமயம் ஒவ்வொருவராக பாஜகவிலிருந்து விலகத் துவங்கியுள்ளது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல்குமார் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்து அதிமுகவில் இணைந்தார். கட்சிக்காக நேர்மையாக உழைத்தும் தனக்கு வேதனை மட்டுமே மிஞ்சியதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் கட்சித் தலைவர் அண்ணாமலை குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் பாஜகவிலிருந்து விலகிய அதன் ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன், இன்று எடப்பாடி பழனிசாமி முன்பாக அதிமுகவில் இணைந்தார். இது தமிழ்நாடு பாஜகவை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, அக்கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு இது ஏக தலைவலியை உண்டுபண்ணியுள்ளது.
இதையடுத்து, இதற்கு அதிருப்தி தெரிவித்து அக்கட்சியின் மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் தனது கருத்துகளைப் பதிவிட்டவண்ணம் உள்ளார். இதுகுறித்து அவர், கூட்டணியில் இருந்தபடி அதிமுக இப்படிச் செய்யக்கூடாது என்றும், பாஜகவிலிருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்கக்கூடாது என்றும், ’தமிழ்நாட்டின் வருங்காலம் இனி பாஜக தான்; அண்ணாமலையின் தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும்’ என்றும் தனது கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்.


























