விவசாய தோட்டத்தில் வைத்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியிலுள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தின் விவசாய தோட்டத்தில் உணவுக்காக நுழைந்த 3 காட்டு யானைகள் அங்கு வைத்திருந்த மின்சார கூண்டை மிதித்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளன.
அப்பகுதியில் அடிக்கடி சுற்றுவட்டாரங்களில் உள்ள வனப்பகுதிகளிலிருந்து யானைகள் உணவுதேடி வயல் பகுதிகளுக்கு வந்து பயிர்களை நாசம் செய்வதும், பின் அங்குள்ள மக்கள் யானைகளை விரட்டுவதும் தொடர்கதையாகிவந்துள்ள நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. உள்ளே நுழந்த 5 யானைகளில் 1 ஆண் யானை, 2 பெண் யானைகள் உள்ளிட்ட 3 யானைகள் உயிரிழந்த நிலையில், உயிர்பிழைத்த 2 யானைகள் உயிரிழந்த தாய் யானையை சுற்றி சுற்றி அங்கேயே வட்டமிட்டு வந்த காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது.
விவசாயி ஒருவர் கீரிப்பிள்ளை பிடிப்பதற்காக இந்த மின்சார கூண்டை அமைத்ததாகவும், அதில் எதிர்பாராத விதமாக யானைகள் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக மின்சாரக் கூண்டு அமைத்த முருகேசன் என்ற விவசாயியை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த நிலையில், உயிர்பிழைத்த 2 குட்டி யானைகளைப் பாதுகாக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவரால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.


























