அரசு விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, பொதுமக்களிடம் தரக்குறைவான முறையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணைநல்லூர் பகுதியிலுள்ள அருங்குறிக்கை என்னுமிடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் பள்ளியின் சுற்றுச்சுவர் திறப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
அப்போது பொதுமக்களைப் பார்த்து அமைச்சர் பொன்முடி பேசிக்கொண்டிருக்கையில், அங்கு வந்திருந்த பெண்களில் சிலர் தங்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று அவரிடம் முறையிட்டனர்.
இதைக் கேட்ட அமைச்சர் பொன்முடி, ”உக்காருங்க…கேக்குறோமில்ல வந்து… எனக்கு அப்டியே ஓட்டு போட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க… நீங்க வந்து கேக்குறீங்க” என்று ஆவேசமான குரலில் அவர்களைப் பார்த்து தரக்குறைவாகப் பேசினார். இதனால் கேள்வியெழுப்பிய பெண்கள் ஒரு நிமிடம் பரபரத்துப் போயினர்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட அமைச்சர் பொன்முடி, ”முதல்வர் சொல்லியிருக்காரு… ஓட்டுப் போட்டவங்க, போடாதவங்க எல்லாருக்கும் செய்யணும்னு… ரோடு போட்டுக் குடுத்தது நானு, பஸ் விட்டது நானு, குடிதண்ணீர் வசதி செஞ்சு குடுத்தது நானு, குறை இருந்தா எழுதி கொடுங்க…எதுக்கு லபோ லபோ-ன்னு கத்துறீங்க” என்று பேசிமுடித்தார். இதனால் அப்பகுதியில் சற்றே பரபரப்பு நீடித்தது.
அமைச்சர் பொன்முடி இவ்வாறு சர்ச்சையாகப் பேசுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக இப்படி ஒரு கூட்டத்தில் பெண்களைப் பார்த்து பேருந்தில் அவர்கள் ஓசியில் பயணம் செய்பவர்கள் என்று இழிவாகப் பேசினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தான் விளையாட்டாகவே அவ்வாறு பேசியதாகத் தெரிவித்தார்.
முன்னதாக திமுக கூட்டம் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, திமுக அமைச்சர்கள் இவ்வாறு சர்ச்சையாகப் பேசி வம்பில் சிக்கிக் கொள்வதைக் குறிப்பிட்டு தனக்கு இதனால் தூக்கம் வருவதில்லை என்று கூறி வருந்தினார். இந்நிலையில், பொன்முடியின் இந்தப் பேச்சால் முதல்வர் ஸ்டாலின் இன்றும் தனது தூக்கத்தை இழக்கப் போகிறார் என்று நெட்டிசன்கள் வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


























