சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை நடிகர் ஆர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்து அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சார்பட்டா பரம்பரை’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தை K9 Studios மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர்.
1970களில் வடசென்னை பகுதியில் குத்துச்சண்டை வீரர்களாக இருந்த இருவரின் வாழ்க்கை மற்றும் அதனூடான அரசியலை அடிப்படையாக வைத்து முழுநீள குத்துச்சண்டை படமாக உருவாகியிருந்த ’சார்பட்டா பரம்பரை’ மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. இதில் வந்த கபிலன், ரங்கன் வாத்தியார், வேம்புலி, டான்சிங் ரோஸ், மாரியம்மாள், கெவின் டாடி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இன்றளவும் மக்களால் மறக்கமுடியாத கதாபாத்திரங்களாக அமைந்தன. அந்த நேரத்தில் ஒடிடியில் வெளியான படங்களில் அதிக லாபம் வசூலித்த படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் விளங்கியது. இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர், ”Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கிலக் குத்துச்சண்டை Round. Sarpatta2 விரைவில்” என்று பதிவிட்டுள்ளார். இச்செய்தி பா.ரஞ்சித் மற்றும் சார்பட்டா பரம்பரை பட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இதன் அடுத்தகட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பா.ரஞ்சித் விக்ரமை வைத்து ’தங்கலான்’ படத்தை இயக்கிவருவதால், அதன் படப்பிடிப்பு முடிந்ததும் இதற்கான வேலைகளை ’சார்பட்டா பரம்பரை’ படக்குழு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடகர் மற்றும் கவிஞர் தெருக்கூத்து அறிவு சார்புடைய பிரச்சினையின் காரணமாக ’பா.ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன்’ கூட்டணி சார்பட்டா பரம்பரை முதல் பாகத்தோடு முறிந்தது. பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் அதன்பின் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு தென்மா இசையமைத்திருந்தார். ’சார்பட்டா பரம்பரை’ முதல் பாகத்தின் பெரிய வெற்றிக்கு அதன் பாடல்கள் முக்கிய பங்காற்றிய நிலையில், அதன் இரண்டாம் பாகத்திற்கான இசையமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.


























