சென்னையில் தனியார் பேருந்துகள் ஓட அனுமதி தரப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதாகவும், Gross Cost Contract அடிப்படையில் முதற்கட்டமாக சுமார் 500 தனியார் பேருந்துகள் இயங்கவிருப்பதாகவும் அண்மையில் செய்திகள் உலாவந்தன. இதற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழக சம்மேளம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்படவில்லை என்றும், அதற்கான சாதக பாதகங்களை தெரிந்துகொள்ளவே முதற்கட்டமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”தற்சமயம் விடப்பட்டுள்ள டெண்டர் என்பது உலக வங்கி வழங்கியுள்ள கருத்துரை அடைப்படையில், தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக பாதகங்களை ஆய்வு செய்வதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர் தான். 2021 பிப்ரவரி 26ம் தேதி இதற்கான GO-வை வெளியிட்டவர்கள் அதிமுக தான். அந்த GO அடிப்படையில் சென்னையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலமாக உலக வங்கி வழங்கியுள்ள பல்வேறு கருத்துரைகளை தொகுத்து இந்த GO வழங்கப்பட்டுள்ளது.
சாதக பாதகங்கள் குறித்த அறிக்கை வெளியானதும், அதை ஆய்வு செய்த பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பேருந்துகள் தனியார் மயமாவதற்கு வாய்ப்பில்லை. சென்னையிலுள்ள அரசு வழித்தடங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் தான் தனியார் பேருந்துகள் இயங்கும். அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே தனியார் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகள் எதுவும் பாதிக்கப்படாது” இவ்வாறு தெரிவித்தார்.


























