‘AK62’ படத்தை முடித்ததும் அஜித் தனது அடுத்த சுற்றுப்பயணத்தைத் துவங்கவிருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் ’துணிவு’. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். அஜித்துடன் சேர்ந்து இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமார் 200 கோடி செலவில் தயாரான இத்திரைப்படம், 300 கோடி கலெக்ஷனை அள்ளியது.
இதையடுத்து அஜித் நடிக்கும் ’AK62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும், அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும், லைகா அப்படத்தை தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது. பின் விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து விலகியதாகவும், ’AK62’ படத்தை ’மீகாமன்’, ’கலகத் தலைவன்’ படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆயினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்தகட்ட திட்டம் குறித்த அறிவிப்பை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், ”லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு, திரு.அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் லைகா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அது ’AK62’ படத்தின் அறிவிப்பு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியின் Thalaivar170 படம் குறித்த அறிவிப்பாக அது இருந்தது. இந்நிலையில், வலிமை அப்டேட், துணிவு அப்டேட் போன்று ’AK62’ குறித்த அப்டேட்டை அஜித்தின் ரசிகர்கள் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர். அதனால் இந்த ட்வீட்டை அடுத்து ’AK62’ படம் குறித்த அப்டேட்டுக்காக மரண வெயிட்டிங்கில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


























