தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் பாஜகவிலிருந்து நேற்று விலகிய நிலையில், தற்சமயம் அதன் செயலாளர் திலீப் கண்ணன் பாஜகவிலிருந்து வெளியேறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவிற்கு என்னதான் ஆயிற்று என்று கேட்கும் அளவிற்கு தடாலடியக பல அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாடு பாஜகவின் முக்கிய அங்கங்களாக இருந்த பல உறுப்பினர்கள் பாஜகவிலிருந்து விலகிய வண்ணம் உள்ளனர்.
நேற்றைய தினம், தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்துவந்த CTR நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தன்னுடைய அறிவிப்பில், கடந்த 1.5 ஆண்டுகளாக பல சங்கடங்களைக் கடந்து கட்சிக்காக பணியாற்றியதாகவும், தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியினரை ஏமாற்ற நினைக்கும் தலைமையை நம்பி பயணிக்க முடியாது என்றும் அண்ணாமலை மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு வெளியேறினார். பின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், தமிழ் நாடு ஐடி விங்கின் செயலாளராக உள்ள திலீப் கண்ணன், பாஜகவிலிருந்து விலகுவதாக தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்த தனது பதிவில், ”இந்த வார் ரூம் இன்னும் எத்தனை பேரை காவுவாங்கப் போகுதோ? தான் பதவிக்கு வரும்போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கியுள்ளார். இறைவனுக்கே வெளிச்சம்.
கே.டி.ராகவனை முதலில் காலி செய்தார். பேராசிரியர் சீனிவாசனுக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் பதவியைக் கொடுக்கவில்லை. அடுத்து பொன்.பாலகணபதியை அசிங்கப்படுத்தினார். நைனார் அண்ணனை மனிதனாகக் கூட மதித்ததில்லை.
பாஜக தலைவராக அண்ணன் முருகன் இருக்கும்போது மாற்றுக் கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டுவந்து கட்சியில் இணைத்தார். அண்ணாமலை வந்து அப்படி யாரையும் கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா? நான் சொன்னது உண்மையா பொய்யா என்று கட்சியில் இருக்கும் 90% பேருக்குத் தெரியும். இன்னும் இந்த வார் ரூம் கோஸ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்பப் போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


























