’பிதாமகன்’ பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக்குறைவால் பணமின்றி தவித்துவரும் நிலையில், பண உதவி செய்யக்கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழில் பிதாமகன், என்னம்மா கன்ணு, லவ்லி, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் எவர்கிரீன் மூவி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் தலைவரான வி.ஏ.துரை.
தொடந்து படங்களை இயக்கிய வந்த இவரது நிறுவனம் இறுதியாக 2016-ல் அப்புக்குட்டி, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான காகித கப்பல் படத்தை தயாரித்த்து. இவர் தயாரித்த படங்களில் பிதாமகன் படம் இவருக்கு நல்ல லாபத்தைத் தந்தது.
தொடர்ந்து பாலாவுடன் இவர் மற்றொரு படம் இணைந்து பணியாற்றவிருந்து, அதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் பணம் கொடுத்து, பின் பட வேலைகள் துவங்காத பட்சத்தில் பாலா அதைத் திருப்பித் தரவில்லையென்று துரை அவர் மீது அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிகழ்வு அச்சமயம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில், தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்படுவதாகவும், தனக்கு யாரேனும் பண உதவி அளித்து காப்பாற்றவேண்டியும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தனக்கு காலில் அடிபட்டு அது இன்னும் ஆறாமல் அவதிப்படுவதாகவும், தன்னை கவனித்துக்கொள்ளக் கூடாத யாரும் இல்லை என்றும், தற்சமயம் நண்பர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளார். மேலும் அவருக்கு உதவி கிடைக்க வேண்டி அவரது வீடியோ வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


























