தனுஷ் நடித்து அண்மையில் வெளியான ’வாத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்டோர் நடித்து கடந்த பிப்ரவரி 17ல் வெளியான திரைப்படம் ’வாத்தி’. தெலுங்கில் இப்படம் ’சார்’ என்ற பெயரில் வெளியானது.
தனியார் கல்வி நிறுவனங்கள் மூலமாக கல்வியை வியாபாரமாக்கத் திட்டமிடும் வில்லன் மற்றும் அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஹீரோ என்ற கதையமைப்பைக் கொண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்தது.
இந்நிலையில், ’வாத்தி’ திரைப்படம் வெளியான இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் தற்போது வரை 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அனேக குஷியில் உள்ளனர்.
கடந்த ஆண்டு தனுஷ், நித்யா மேனன் நடித்து வெளியான ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலை அள்ளிய நிலையில், வாத்தி படமும் 100 கோடி வசூல் லிஸ்டில் இணைந்துள்ளது தனுஷையும் அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிட்த்தக்கது.


























