திருமணத்தின் போது ஒலித்த DJ ஒலியைத் தாங்கமுடியாமல் பீகாரில் மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சீதாமார்ஹி மாவட்டம், சோன்பர்சா பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றில் மணமகன் சுரேந்திரகுமார், மணமகள் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்த சமயம், திருமண நிகழ்ச்சியாக DJ இசை நிகழ்ச்சி ஒலித்துக்கொண்டு இருந்துள்ளது. இதன் இரைச்சல் தொடக்கத்திலிருந்தே மணமகனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் DJ இசையை நிறுத்தவேண்டி மணமகன் சுரேந்திரகுமார் கேட்டுக்கொண்டும், பலர் அதற்கு நடனமாடிக்கொண்டிருந்ததால் இசை நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மணமகன், மணமகள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்வின்போது சுரேந்திரகுமார் திடீரென சுருண்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பால் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
DJ ஒலியின் அதிர்வுகளால் சுரேந்திரகுமாருக்கு தலை சுற்றி நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் உயிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வின்போது மணமகன் இவ்வாறு மாரடைப்பால உயிரிழந்துள்ள நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


























