ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் மேலும் ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மாடவாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார்(36). சென்னையிலுள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வினோத் குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி தொடர்ந்து அதனை விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் விளையாடுவதற்காக பல லோன் செயலிகள் மூலம் ரூ.20 லட்சம் வரை கடனாகப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எல்லா பணத்தையும் ரம்மி விளையாட்டில் இழந்த விரக்தியிலும், கடன் வாங்கிய செயலியிலிருந்து கடனைத் திரும்பச் செலுத்த கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவும் வினோத் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிகழ்வு அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 15-ஆவது தற்கொலை இது.
இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், இதில் அடிமையாவது குறித்து பல முறை தான் கணவர் வினோத் குமாரை எச்சரித்ததாகவும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக இதிலிருந்து தன்னால் மீண்டு வரமுடியவில்லை, தனது சாவே கடைசியாக இருக்கவேண்டும், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


























