வெளிமாநிலங்களிலிருந்து வேலைதேடி தமிழகம் வருபவர்களை என்றும் தமிழ்நாடு வரவேற்பதாகவும், அவர்கள் தாக்கப்படுவது போல் செய்தி பரப்பி கீழ்த்தரமான அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், ”வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்வார்கள். தாய்த் தமிழகம் என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்.
வர்த்தகத்திற்காக, தொழிலுக்காக, மருத்துவத்துக்காக, கல்விக்காக,வேலைக்காக என பல்வேறு மாநில மக்கள் தமிழகத்திற்கு வருவது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழகத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள். சமீப காலமாக வேலை வாய்ப்புகளைத் தேடி அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் தமிழகத்திற்கு வருவது அதிகரித்து வருகிறது.
சேவைத் துறைகள், கட்டுமானம், சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழகம் திகழ்வது தான் இதற்குக் காரணம். தமிழகத்திற்கு சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வருவதற்குக் காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வருகை தரும் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தமிழகம் எப்போதும் போல் வரவேற்கின்றது.
வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழகத்தில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது”
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


























