தமிழ்நாட்டின் முக்கிய இரயில் நிலையங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் கூட்டம் கூட்டமாக இரயில்களுக்காகக் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக பெரிதும் சர்ச்சையாகி வரும் விஷயம் வடமாநிலத்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று பரவும் செய்தி. தங்கள் மாநிலங்களில் சரியான வேலைவாய்ப்பு இல்லை என்று வடவர்கள் தமிழ்நாட்டில் பஞ்சம் பிழைக்க வருவதும், அதுவே அபாயகரமான எண்ணிக்கையை அடைவதும், இதனால் இங்குள்ளவர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் அவர்களின் வருகை மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுக்கொண்டே தான் உள்ளன.
இந்த நிலையில் தான் புதிய சர்ச்சையாக பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்பட்டதாக தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன. ஆயினும் இது திட்டமிட்டே பரப்பப்படும் வதந்தி என்று தமிழக காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இதுகுறித்த விரிவான அறிக்கை ஒன்றையும் அளித்திருந்தார்.
இதையடுத்து தாக்குதல் எதிரொலியாக வடமாநிலத்தவர்கள், திடீரென கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டை விட்டு சொந்த ஊர்களுக்கே செல்வதாக தகவல்கள் கசிந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய இரயில் நிலையங்களில் அவர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருந்தது.
ஆனால், அவர்களிடம் விசாரித்த நிலையில், மார்ச் 8ல் ஹோலிப்பண்டிகை வரவிருப்பதாகவும், அதைக் கொண்டாடவே தாங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதாகவும் அவர்கள் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நிலை குறித்து கண்டறிய 2 IPS அதிகாரிகள் உட்பட 5 பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னை வருவது குறிப்பிடத்தக்கது.


























