சென்னை மெட்ரோ போக்குவரத்தில் நேற்றைய தினம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் அது சரிசெய்யப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய மக்கள் போக்குவரத்து சாதனமாக மெட்ரோ இரயில் மாறி வருகிறது. பல முக்கிய இடங்களை இணைப்பதாலும், குறுகிய இடைவெளியில் தொடர்ந்து இரயில்கள் இயக்கப்படுவதாலும் மெட்ரோ இரயில்களைப் பயன்படுத்த சென்னை மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சென்னை மெட்ரோ இரயில் போக்குவரத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு வழியாக சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை செல்லும் இரயில்கள் பரங்கிமலை இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி விம்கோ நகரிலிருந்து இயக்கப்ப்டும் மெட்ரோ இரயிலுக்கு மாறிப் பயணிக்கவும் மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 6 பேர் கொண்ட குழு நேற்றிலிருந்து தொடர்ந்து கோளாறைச் சரிசெய்ய வேலைகளில் ஈடுப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 4 மணியளவில் கோளாறு சரிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பச்சை, நீலம் ஆகிய இரண்டு வழித்தடங்களிலும் வழக்கம் போல விமான நிலையம் வரை இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


























