பாஜக உறுப்பினர்களின் விலகல் குறித்த கேள்விக்கு தான் ஒன்றும் தோசை சுட்டுத்தர பாஜக தலைவராக அமர்த்தப்படவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவிலிருந்து அண்மையில் அதன் ஐடி விங் பிரிவின் தலைவர் CTR நிர்மல் குமார் மற்றும் செயலாளர் திலீப் கண்ணன் உள்ளிட்டோர் விலகி அதிமுகவில் இணைந்தனர். மேலும் தங்களுடைய விலகல் அறிவிப்பில் மாநில பாஜக தலைவரான அண்ணாமலை குறித்து பல குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், அண்ணாமலை மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும், கட்சி உறுப்பினர்களின் விலகல் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு கோபத்துடன் அவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்த கேள்வியின்போது செய்தியாளர்களுக்கு பதிலளித்த அண்ணாமலை, ”அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு ஒன்றும் தோசை சுடுவதற்கோ, இட்லி சுடுவதற்கோ, பாஜக தலைவர் என்ற பெயரில் இருக்கையைத் தேய்க்கவோ வரவில்லை. நான் பாஜகவின் தலைவராக பொறுப்பெற்றுள்ளேன். தலைவராகப் பொறுப்பேற்றவர் தலைவராகத்தான் முடிவெடுப்பார். அம்மையார் ஜெயலலிதாவின் முடிவுகள் எவ்வாறு இருக்குமோ அப்படித்தான் என்னுடைய முடிவுகளும் இருக்கும். இதில் பயமோ, யாரையும் சார்ந்து பேசுவதோ, பின்னால் போய் அவர்களிடம் கை காலில் விழுந்து பேசுவதெல்லாம் இல்லை.
அதிமுகவிலிருந்து நிறைய பேர் விலகி திமுகவில் இணையும்போது ஜெயலலிதா அம்மையார் மீது இவ்வாறு குற்றச்சாட்டுகள் வைத்திருக்கலாம் அல்லவா? கலைஞர் அவர்கள் கட்சியிலிருந்து யாரும் வெளியேறவில்லையா? ஏனென்றால் அவர்கள் தலைவர்கள். தலைவர்கள் முடிவெடுத்தால் நான்கு பேர் கோபித்துக்கொண்டு வெளியேறத்தான் செய்வார்கள். பாஜக தலைவராக இருந்துகொண்டு ஒவ்வொருவரிடமும் பதமாக என்னால் பேசிக்கொண்டு இருக்கமுடியாது. கட்சியின் வளர்ச்சிக்கு என்ன முடிவெடுக்கவேண்டுமோ துணிந்து எடுப்பேன்.
என்னைத் திட்டிவிட்டு வெளியேறும் நபர்களெல்லாம் போய் விவசாயமா செய்கிறார்கள்? அல்லது பொதுச்சேவை செய்கிறார்களா? வெளியில் இன்னொரு அரசியல் கட்சியில் சேர்ந்து இன்னொரு தலைவரை வாழ்க என்றுதானே சொல்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள் போகட்டும்” என்று பேசினார்.


























