சரவணன் அருள் நடிப்பில் வெளியான ’தி லெஜண்ட்’ திரைப்படம் நாளை ஒடிடி தளத்தில் வெளியாகிறது!
ஜே.டி. – ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள், கீதா திவாரி, ஊர்வசி ரெளடாலா, சுமன், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ’தி லெஜண்ட்’. அறிவியல் புனைவுக் கதையாக உருவாகியிருந்த இப்படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் விஞ்ஞானியாக நடித்திருந்தார். முன்னதாக தனது ஜவுளிக்கடை நிறுவன விளம்பரங்களில் நடித்துவந்த சரவணன் இப்படத்தைத் தயாரித்து இதில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு என்று தொழில்நுட்ப ரீதியாக பெரிய கலைஞர்களின் கூட்டணியிலும், காட்சியமைப்புகளில் நேர்த்தியாகவும் உருவான இத்திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்திருந்த சரவணனின் நடிப்பு படத்தில் ரசிக்கும்படியாக இல்லாமல் போனது படத்திற்குப் பின்னடைவைத் தந்தது. ஆனாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்திருந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன.
இந்நிலையில் இப்படம் ஒடிடியில் வெளியாகவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான சரவணன் தெரிவித்துள்ளார். இதன்படி இப்படம் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


























