வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் விடுதலை. RS Infotainment தயாரிப்பு நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை மையமாகக் கொண்டு தயாராகியுள்ள இப்படம் குறிப்பிட்ட ஒரு காலத்தில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. வெற்றிமாறனின் படங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வெற்றிப்படமாகத்தான் அது இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு தரமான படங்களை அவர் படைத்து வருகிறார்.
’பொல்லாதவன்’ தொடங்கி ’அசுரன்’ வரை அவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் பல பக்கங்களுக்கு விவரித்து எழுதும் அளவுக்கு அதீத மெனக்கெடலால் தனது படங்களை சிறந்த படைப்புகளாக உருவாக்குபவர் வெற்றிமாறன். அந்த வகையில் விடுதலை படம் மீதும் அவரது ரசிகர்களுக்கு ஏக எதிர்பார்ப்பு உண்டு.
இந்த நிலையில், விடுதலை படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு தற்சமயம் வெளியிட்டுள்ளது. அதன்படி விடுதலை படத்தின் இசை மற்றும் டிரெய்லர் மார்ச் 8ல் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


























