ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், பாஜகவுக்குத் தேவையான பலம் குறித்து இத்தேர்தல் உணர்த்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் தருவாயில் உள்ளது. தற்சமயம் வரை திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சம் வாக்குகளை நோக்கி முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளை பாஜக ஏற்றுக்கொள்வதாகவும், ஆளும் கட்சியை எதிர்க்கத் தேவையான பலம் எவ்வளவு என்பதை இடைத்தேர்தல் தங்களுக்கு உணர்த்தியுள்ளதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது. கூட்டணி தர்மத்தின்படி அதிமுக வேட்பாளருக்காக பணியாற்றியிருக்கிறோம்,
இடைத்தேர்தலில் ஒரு கட்சி ஜெயிக்கும், பொதுத்தேர்தலில் மற்றொரு கட்சி ஜெயிக்கும் என்ற வரலாறு தமிழகத்தில் உண்டு. இடைத்தேர்தலில் ஆளுகின்ற கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. 2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கான தேர்தல். ஆளும் கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் எஙளுக்கு உணர்த்தியுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


























