ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில், செய்தியாளர்களிடம் வெற்றி குறித்து அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு என்ணிக்கை இன்று நடைபெற்றது. அதன்படி திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி சார்பு வேட்பாளர்கள் உட்பட 77 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
இதில் வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே இவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்தார். தபால் ஓட்டுகளிலும் அவரே முன்னிலை வகித்த நிலையில் அதற்கடுத்த இடங்களில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் பிற சுயேட்சைக் கட்சிகள் இருந்தன.
இந்நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் படி 76,834 வாக்குகள் பெற்று கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளார் இவிகேஎஸ் இளங்கோவன். அவருக்கு அடுத்த இடத்திலிருந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகள் பெற்றுள்ளார். தேர்தல் வாக்குகள் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பண நாயகம் வென்றதாகவும், ஜனநாயகம் தோற்றதாகவும் தென்னரசு தெரிவித்தார்.
இந்த நிலையில், தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் தான் இல்லை என்று இளங்கோவன் உருக்கமாகப் பேசியுள்ளார். இது சார்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”வெற்றி விழாக்கள் நடத்தவோ, முழுமையான வெற்றியை கொண்டாடவோ கூடிய மனநிலையில் நான் இல்லை. எனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்வேன். வெற்றிபெறுவேன் என்பது ஒரு மாதத்திற்கு முன்பே எனக்குத் தெரியும். இந்த வெற்றி நமது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. 20 மாத ஆட்சிக் காலத்தில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு இந்த வெற்றி ஊக்கத்தை தரும். ஈரோடு மக்களுக்கு செய்ய வேண்டியதை அமைச்சர் முத்துசாமி உடன் இணைந்து செய்வேன்” இவ்வாறு பேசினார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


























