சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ’Thalaivar170’ திரைப்படம் குறித்த அசத்தல் அறிவிப்பை லைகா புரொடக்ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 169வது திரைப்படம் ’ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் சேர்ந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். ’டாக்டர்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சனுடன் கூட்டணி அமைத்தார். பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெறவே இப்படம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நெல்சனுடன் ரஜினி இணைவது உறுதி என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 170வது திரைப்படமான, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும், லைகா நிறுவனம் இதனைத் தயாரிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அதுகுறித்த அப்டேட்டுகள் வெளிவராதவண்ணம் இருந்தன.
இந்நிலையில், லைகா புரொடக்ஷன் நிறுவனம் இன்று காலை 10.30 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருப்பதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர்170’ படம் குறித்த அறிவிப்பை லைகா வெளியிட்டுள்ளது. இப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குவதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் இப்படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ’லால் சலாம்’ திரைப்படம் ரஜினியின் 170வது படம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்சமயம் வேறு கூட்டணியுடன் ’தலைவர்170’ படம் அறிவிக்கப்பட்டுள்ளது ரஜினி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஒருவேளை த.செ.ஞானவேல் இயக்கத்தில் ’தலைவர்170’ படத்தில் ரஜினி நடித்ததும் ’லால் சலாம்’ படத்தில் அவர் நடிப்பார் என்று யூகிக்கப்படுகிறது. படக்குழு வெளியிடும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வைத்து இதுகுறித்த விபரங்கள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























