ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
இந்நிலையில் இதற்கான வாக்குப்பதிவு 238 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் 2,27,547 வாக்குகள் பதிவாகின. இது அத்தொகுதிக்கான மொத்த வாக்காளர்களில் 74.79% வாக்குகளாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட இது 9% அதிகம். மேலும் 398 தபால் ஓட்டுகளும் இதில் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஈரோடு, சித்தோடு பகுதியிலுள்ள அரசுக் கல்லூரியில் காலை 8 மணி தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ள இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி அவர் 17,324 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவருகிறார். அதிமுக 5,627 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 1,146 வாக்குகளும், தேமுதிக 178 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள், இனி வேகமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.


























