முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமராகக்கூடாது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், திரைப்பிரபலங்களும், கட்சித் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, செய்தியாளர் சந்திப்பின்போது முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும் என்றும், அவர் ஏன் பிரதமராகக் கூடாது என்றும் பேசியுள்ளார்.
இதுபற்றி விரிவாகப் பேசிய அவர், ”இது ஒரு அற்புதமான தொடக்கம். நாட்டின் ஒற்றுமைக்காக ஸ்டாலினும், திமுகவும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்; வேற்றுமையில்தான் நாட்டின் ஒற்றுமை இருக்கிறது. வேற்றுமையை பாதுகாப்பதன் மூலம் ஒற்றுமையை பாதுகாக்க முடியும். காஷ்மீருக்கும் தமிழ்நாட்டுக்கும் பொதுவானதாக தட்பவெப்பநிலை, மொழி என எதுவும் இல்லை. ஆனால் இந்தியா என்ற வகையில் நாம் இணைகிறோம். மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்.
ஸ்டாலின் ஏன் பிரதமராகக் கூடாது? அதில் என்ன தவறு இருக்கிறது? எதிர்க்கட்சிகளை இணைக்கும் முக்கிய கருவியாக ஸ்டாலின் மாறிவிட்டார் என்றே நினைக்கிறேன். நாட்டை மேலும் வலுப்படுத்த கடவுள் அவருக்கு உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு பேசினார்.


























