’பொன்னியின் செல்வன் பாகம் 2’ விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அதன் Glimpse வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி படமாக்கப்பட்ட இதனை மணிரத்னம் இயக்கினார். மணிரத்னம் மற்றும் லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் இணைந்து தயாரித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்தார். பட்த்தொகுப்பு, ஸ்ரீகர் பிரசாத்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023, ஏப்ரல் 28ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட்து.
இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு துவங்கியுள்ளது. அதன்படி ’பொன்னியின் செல்வன் பாகம் 2’ வெளியாவது குறித்து அதில் நடித்துள்ள நட்சத்திரங்கள் பேசுவது போன்ற Glimpse வீடியோ தற்சமயம் வெளியாகியுள்ளது. இதனை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, படத்தின் டிரெய்லர் உள்ளிட்ட பிற அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























