நல்ல நண்பர்களை மட்டும் வாழ்வில் இழந்துவிடக்கூடாது என்றும், தனக்கு நண்பர்களே வாழ்வில் கிடையாது என்றும் இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் சோகமான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் செல்வராகவன். நடிகர் தனுஷின் உடன்பிறந்த சகோதரர். இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. இறுதியாக இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்து ’நானே வருவேன்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இயக்குநராக வலம் வந்துகொண்டிருந்த செல்வராகவன் நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் பட்த்தில் நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து சாணிக்காயிதம், நானே வருவேன் படத்தில் சிறிய வேடம் உள்ளிட்ட பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில், மோகன் ஜி இயக்கத்தில் உருவான ’பகாசூரன்’ திரைப்படம் அண்மையில் வெளியானது.
வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகன் அவ்வப்போது ட்விட்டரில் பகிரும் ட்வீட்டுகள் வைரலாகும். அந்த வகையில் வாழ்வில் யாரும் நண்பர்களை இழந்துவிடவேண்டாம் என்று ட்விட்டரில் ட்வீட் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் ”அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்” என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு வலைதளங்களில் தற்சமயம் வைரலாகி வருகிறது. பலரும் நட்பின் முக்கியத்துவம் பற்றிய செல்வராகவனின் ட்வீட்டை பகிர்ந்து வருகின்றனர்.


























