சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இனி ஒலி வடிவிலான எந்த அறிவிப்புகளும் இருக்காது என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழக்கூடியது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய இரயில் நிலையம் எனப்படும் சென்னை சென்ட்ரல். நாள் ஒன்றுக்கு சுமார் 200 இரயில்கள் வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கப்படும் இந்த இரயில் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியவண்ணமே இருக்கும்.
இந்நிலையில் தான், சென்ட்ரல் இரயில் நிலையம் இந்தியாவின் முதல் அமைதியான இரயில் நிலையம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதாவது, ’பயணிகளின் கனிவான கவனத்திற்கு… வண்டி எண்… நடைமேடை எண்’ என்று ஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் இனி அறிவிக்கப்படமாட்டாது என்று தெற்கு இரயில்வே நிர்வாக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக பெரிய திரைகளில் வண்டி எண், நடைமேடை எண், புறப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை சென்ட்ரல் புறநகர் முனையம், ஈ.வே.ரா. பெரியார் சாலை, வால் டாக்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் பெரிய டிஜிட்டல் திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை கடந்த ஞாயிறிலிருந்து துவங்கியுள்ளது.
திரைகளில் பார்த்து இரயில் குறித்தான தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியாத பார்வைக் குறைபாடுள்ள பயணிகள், பிரெய்லி வரைபடங்கள் மூலமாக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் QR Code-ஐ Scan செய்தால் நிலையங்கள் குறித்த தகவல்களை சைகை மொழியில் விளக்கும் வீடியோவைக் கண்டுகொள்ளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கான QR Code-கள் இரயில் நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
பயணிகள் இரயில்கள் குறித்த மேலும் பல தகவல்களை ’பயணிகள் தகவல் மையங்களில்’ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றும், பயணிகள் இரைச்சல் இல்லாத வகையில் பயணம் மேற்கொள்ளவே இவ்வாறான புதிய முயற்சி கையாளப்பட்டுள்ளதாகவும், இது சோதனை ரீதியான நடவடிக்கையே என்றும் இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


























