நாகர்கோவிலில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடமாநில ஊழியரின் வீடியோவை சுட்டிக்காட்டி, திரைப்பட இயக்குநர் நவீன் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவாதங்கள் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. முன்பெப்போதும் இல்லாத அளவாக வடமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் தமிழகம் நோக்கி வருவது இங்குள்ளவர்களுக்கு நெருக்கடியை அதிகரித்தவண்ணம் உள்ளது.
அண்மைக்காலமாக, தமிழ்நாட்டில் ஆங்காங்கே தமிழர்கள் வடமாநில இளைஞர்களால் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன. அதே சமயம் அண்மையில், இரயிலில் தமிழர் ஒருவர் வடமாநில இளைஞர்களை சரமாரியாகத் தாக்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
இந்த நிலையில், நாகர்கோவில் இரயில் நிலையத்தில், டிக்கெட் வழங்கும் வடமாநில ஊழியர் ஒருவர் டிக்கெட் வாங்கவந்த பயணிகளிடம் இந்தியில் தரக்குறைவாக பேசியதாக செய்திகள் வைரலாகின. இதைக் குறிப்பிட்டு இயக்குநர் நவீன் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர், ”இந்த அரசாங்க ஊழியருக்கும், பஞ்சம் பிழைக்க வந்த ஒடுக்கப்பட்ட வடமாநில சகோதரனுக்கும் வேறுபாடு உண்டு. இவன் ஒன்றிய அரசு மாநிலங்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தின் வாயிலாக வந்தவன். வடக்கின் சாதி ஆதிக்க அரசியலால் வஞ்சிக்கப்பட்டவன் அந்த ஒடுக்கப்பட்ட சகோதரன்.
ரயிலுக்குள் கூட்டமாக இருந்த ஒடுக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களை, ஒற்றை ஆளாக நம் தமிழ் சகோதரர் ஒருவரால் அடிக்க முடிந்தது. அவர்கள் பயந்து நின்றனர். கூட்டமாக இருக்கும் நம் மக்களிடம் இந்த வடமாநில அதிகாரி திமிருடம் பேசுகிறார். நாம் நியாயம் கேட்கிறோம். இதுதான் வேறுபாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏழ்மை நிலை காரணமாக பஞ்சம் பிழைக்கவரும் வடமாநிலத்தவர்களுக்கும், மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வடமாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் வேறுபாடு உள்ளதென ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். அண்மையில், வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல என்றும், இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும் இவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


























