தனது 512 கிலோ வெங்காயத்தை ஏலத்தில் விற்று வெறும் ரூ.2-க்கான காசோலையைப் பெற்றுள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், போர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான். 58 வயதாகும் இவர் தனது நிலத்தில் விளைவித்த சுமார் 512 கிலோ வெங்காயத்தை சோலாப்பூர் வேளாண் உற்பத்தி சந்தைக்கு ஏலத்தில் விட கொண்டு சென்றுள்ளார்.
ஏதேதோ எதிர்பார்த்துச் சென்ற துக்காராமுக்கு விளைந்தது ஏமாற்றமே. அவர் கொண்டு சென்ற வெங்காயம் கிலோ ரூ.1-க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பார்த்திராத துக்காராம், வேறு வழியின்றி கிலோ ரூ.1 என்ற கணக்கில் 512 கிலோ வெங்காயத்தை ஏலத்தில் விற்றுள்ளார். அவ்வாறு வந்த 512 ரூபாயில் அவர் வெங்காயம் கொண்டுவந்த வாகனக் கூலி ரூ.509.51 கழிக்கப்பட்டு ரூ.2.49-க்கான காசோலை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது துக்காராமை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 40,000 ரூபாய் செலவில் விளைந்த வெங்காயங்கள் ரூ.2-க்கு ஏலம் போனது விவசாயி துக்காராமை துக்கம் அடையச் செய்துள்ளது. ஆனால் துக்காராமின் வெங்காயங்களை ஏலத்தில் எடுத்தவர்கள் அவரது வெங்காயம் தரம் குறைந்து இருப்பதாகவும், அதனாலேயே அவற்றை கிலோ ரூ.1-க்கு ஏலம் எடுத்ததாகவும் தெரிவிக்கின்றனர். இதையெல்லாம் விட சோகம் என்னவென்றால், துக்காராம் பெற்ற காசோலையில் உள்ள ரூ.2 தொகை வங்கியில் டெபாசிட் ஆகி அவர் கைக்கு வந்துசேரவே 45 நாட்கள் ஆகிவிடும் என்பதுதான்.
இச்சம்பவம் விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை செலவு செய்தும், எவ்வளவு சிரமப்பட்டு விளைவித்தும் விவசாயிகளுக்கான ஊதியம் மட்டும் சரியாகக் கிடைப்பதேயில்லை என்று பலரும் துக்காராமிற்கு நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி வலைதளங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


























