கார்ல் மார்க்சின் கோட்பாடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறாகப் பேசிய விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலாச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில், ராஜ்பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கார்ல் மார்க்சின் கோட்பாடு இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்ச்சைக்குறிய விதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். கார்ல் மார்க்சின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே நிரந்தர மோதல்களைக் கொண்டதாக உள்ளதாக அவர் தெரிவித்திருந்த கருத்துக்கு சிபிஎம் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கார்ல் மார்க்ஸ் குறித்த சர்ச்சைப் பேச்சுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.
கார்ல் மார்க்ஸ் குறித்து அவதூறாக வாய்க்கொழுப்போடு பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும். கார்ல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28ம் தேதி போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.


























