முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் அவரது பிறந்த நாளையொட்டி அதிமுகவினர் இனிப்புகளை வழங்கி அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை வாழ்த்திப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மதிப்பிற்குரிய அமரர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று. அவர் தற்போது நம்மிடம் இல்லையே என்ற வருத்தத்துடன் அவரை நினைவுகூர்கிறேன். ஜெயலலிதா போன்ற ஒரு பெண்மணியை நாம் பார்க்க முடியாது. அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை போன்ற குணங்களைக் கொண்ட பெண்மணி அவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு, அதிமுக பிளவுபட்ட நிலையில், கட்சியின் தலைமையேற்க கட்சியிலிருந்த மூத்த தலைவர்களே யோசித்த சமயம், ஒரு தனி பெண்ணாக இருந்து பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி, பலப்படுத்தி, அதைப் பெரிய கட்சியாக்கி, பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டவர் ஜெயலலிதா.
இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவை அவ்வளவு மதித்தார்கள். அவரது திறமையைப் பார்த்து பிரமித்தார்கள். ஒரு காலகட்டத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது. அவருக்கு எதிராக நான் பேசவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு என் மகள் திருமணத்திற்கு அவரை அழைக்கச் சென்றபொழுது எல்லாவற்றையும் மறந்து என் மகளின் திருமணத்திற்கு வந்து திருமணத்தை நடத்திக்கொடுத்தார். அவ்வளவு பெரிய கருணை உள்ளம் கொண்டவர் அவர். அவர் நாமம் வாழ்க”
இவ்வாறு நெகிழ்ச்சி பொங்கப் பேசியுள்ளார்.


























