தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக குளிர் குறைந்து பகல் நேர வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகிறது. முன்னதாக ஆங்காங்கே மழை சற்று குளிர்வித்துவந்த நிலையில், வெப்பம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
பொதுவாக சித்திரையில் வெப்பம் தகிக்கும் அளவுக்கு இருந்தாலும், அதற்கு முந்தைய மாதங்களான மாசி மற்றும் பங்குனியிலேயே அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து வெப்பம் வெளுக்கத் துவங்கிவிடும். அந்த வகையில் தற்சமயம் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் வாட்டத் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























