வாத்தி படத்தில் இடம்பெற்ற ‘வா வாத்தி’ பாடலின் தனுஷ் பாடிய வெர்ஷன் யூடியூபில் வெளியானது!
வெங்கட் அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு உள்ளிட்டோர் நடித்து கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியான திரைப்படம் ‘வாத்தி’. தெலுங்கில் இப்படம் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது.
அரசுப் பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்க திட்டமிடும் வில்லன் மற்றும் அதை கதாநாயகன் எப்படி தடுக்கிறார் என்ற கதையமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் சூர்யதேவ் நாகா வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் நவீன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இப்படத்திலிருந்து பாடகர் ஸ்வேதா மோகன் குரலில், தனுஷ் பாடல் வரிகளில் வெளியான ’வா வாத்தி’ பாடல் ரசிகர்களிடையே பயங்கர ஹிட்டடித்தது. காதாநாயகனால் கவரப்பட்ட கதாநாயகி பாடுவது போன்ற யதார்த்த வரிகளைக் கொண்டுள்ள இப்பாடல் பலரையும் கவர்ந்து ஆட்டம்போட வைத்துவருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என எதைத்திறந்தாலும் இப்பாடலைப் பலர் பாடியும், நடனமாடியும் வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனுஷ் குரலில் Dhanush Reprise Version என்ற பெயரில் தற்சமயம் இப்பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.


























