நடிகர் மயில்சாமியின் மரணம் குறித்து தவறுதலாக பொய் செய்திகளை யூடியூப் சேனல்கள் சில பரப்புவதாக அவரது மகன் அன்பு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 18ம் தேதி சிவராத்தி விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் மயில்சாமி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தனது தந்தையின் மரணம் குறித்து தவறாக சில யூடியூப் சேனல்கள் செய்தி பரப்புவதாக மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி வேதனை பொங்கத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”அன்று என்ன நடந்தது என்று தெரியாமல் அப்பாவின் மரணம் குறித்து பலவிதமாக சித்தரித்து யூடியூப் சேனல்கள் சில செய்தி வெளியிடுகின்றன. அன்றைய தினம், டப்பிங் வேலைகள் முடித்து அப்பா வீட்டிற்கு வந்தார். பின் கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு இரவு 11 மணி போல வீடு திரும்பினார். பின் பசிப்பதாகக் கூறவே நான், அம்மா, அப்பா மூவரும் சாப்பிட்டோம். சிறிது நேரம் கழித்து அப்பா, உண்ட உணவு செறிக்கவில்லை என்று கூறி சிறிது சுடுதண்ணீர் அருந்தினார். அதன் பிறகு நான் எனது அறைக்குச் சென்றுவிட்டேன். பின்னர் தான் அம்மா என் அறைக்கு வந்து அப்பா மூச்சுவிட சிரமப்படுவதாகத் தெரிவித்தார். உடனே நான் அருகிலிருந்த மருத்துவமனை ஒன்றிற்கு அப்பாவை கொண்டுசெல்லும் வழியிலேயே காரில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த அப்பா என் மீது சாய்ந்தார். பிறகு மருத்துவமனையை அடைந்ததும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறினர். அன்று நடந்தது இதுதான்.
ஆனால் சில யூடியூப் சேனல்கள் அப்பா திருவண்ணாமலையில் இருக்கும்போதே இறந்துவிட்டதாகவும், சிவன் கோவிலில் பூஜையில் இருக்கும்போதே இறந்துவிட்டதாகவும், இன்னும் சிலர் அவரது மரணத்திற்கு மதுப்பழக்கம் தான் காரணம் என்றும் பொய்யான செய்திகளைக் கூறி வருகின்றனர். அப்பா உடல் நிலையில் பிரச்சினை வரவே மருத்துவர்கள் பேச்சுக்கிணங்க அவர் இறப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். எனவே உங்களுக்கு உண்மை தெரியவில்லையெனில் எங்களிடம் வந்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள்.
அப்பா மட்டுமின்றி நானும் எம்.ஜி.ஆர். பக்தன் தான். உதவுவதைப் பற்றி அப்பா எனக்கும் கற்றுத்தந்துள்ளார். எனவே அப்பா செய்துவந்த உதவியை இனி நான் செய்வேன். அப்பா இறந்துவிட்டாரே என்று யாரும் கவலைப்படவேண்டாம். எனது சில வேலைகள் முடிந்தவுடன் அவர் இடத்திலிருந்து அவர் செய்த உதவியை நான் தொடர்வேன்” என்று பேசினார்.


























