ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற அதிரடித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் ஒ.பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் இபிஎஸ் ஆதரவினர் தமிழகமெங்கும் மகிழ்ச்சி ஆரவாரங்களில் திளைத்துள்ளனர்.
இந்நிலையில், எதிராளிகளின் முகத்திரை தீர்ப்பின் வாயிலாக கிழிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
”ஏற்கனவே உயர்நீதிமன்றம் ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழு செல்லும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். ஆயினும் பொதுக்குழு செல்லும் என்ற அற்புதமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதனால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சியோடு கட்சிப்பணியை ஆற்றும். இந்தத் தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எஙளின் வெற்றிச் செய்திக்கு கைகொடுக்கும்.
அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள், திமுகவின் B டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது. இனி எங்களுக்கும் அவர்களுக்கும்(ஒபிஎஸ்) எந்தத் தொடர்பும் இல்லை. எங்களைப் பற்றி பேச அவருக்கு இனி தகுதியுமில்லை, தேவையுமில்லை. அவர்கள் சிவில் நீதிமன்றம் செல்வது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. உச்சநீதிமன்றம் தான் இறுதியானது.
ஒபிஎஸ் ஆதரவாளர்களில் பாதிபேர் என்னிடம் வந்துவிட்டனர். நேற்றுகூட ஒருவர் என்னிடம் வந்தார். இனி ஒவ்வொருவராக அவரிடமிருந்து என்னிடம் வந்துவிடுவார்கள், யாரும் அவருடன் நிற்கமாட்டார்கள். இந்தத் தீர்ப்புக்காகத்தான் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். எனவே ஒரு சிலரைத் தவிர ஒபிஎஸ் ஆதரவாளர்கள் யார் வந்தாலும் அவர்களை அதிமுக ஏற்றுக்கொள்ளும்” என்று தெரிவித்தார்.


























