அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து. மேலும் ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து.
இந்த நிலையில், இதை எதிர்த்து ஒபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு பிப்ரவரி 23ம் தேதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு இவ்வழக்கிற்கான தீர்ப்பை வாசித்தனர். இதையடுத்து ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒ.பன்னீர் செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒபிஎஸ் தொடர்ந்த அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பால் இபிஎஸ் தரப்பினர் ஆரவாரத்தில் உள்ளனர். அதே சமயம் இத்தீர்ப்பு ஒபிஎஸ் அணியினருக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் ஆகியோரின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


























