அருந்ததியர் இன மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய காரணத்திற்காக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுடன் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு கட்சியும் கரகாட்டக் கலைஞர்களை வைத்து நடனம் ஆடுவது, பொதுமக்களின் பாத்திரங்களைக் கழுவிக்கொடுத்து உதவி செய்வது போன்ற நூதன முறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் கடந்த 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனி பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற சீமான், அருந்ததியர் இன மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியது பல்வேறு விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் துப்புரவுத் தொழிலுக்காக ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்டனர் என்று அவர் பேசினார். இதைத்தொடர்ந்து கொதிப்படைந்த அருந்ததியர் இன மக்கள் அவரது உருவ பொம்மையை எரித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகளும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சீமானின் பேச்சைக் கண்டித்து ஈரோடு தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக சீமான் பேச்சு குறித்து அவரது கட்சியினரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் வரலாறையே கூறியுள்ளதாக அவர்கள் தெரிவித்தது குறிப்பிட்த்தக்கது.


























