கார்ல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதற்கு தக்க பதிலடி தந்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன்.
நேற்றைய தினம் சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற பேராசிரியர் தர்மலிங்கம் எழுதிய ’பண்டித் தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம்’ மற்றும் ’பண்டித் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள்’ ஆகிய புத்தகங்களின் தமிழாக்க வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கார்ல் மார்க்சின் கோட்பாடு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பேசியிருந்தார்.
இதுகுறித்து பேசிய அவர், ”நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நான்கு முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை இறையியல், டார்வினிய கோட்பாடு, கார்ல் மார்க்ஸ் கோட்பாடு மற்றும் ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை. கார்ல் மார்க்சின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே நிரந்தர மோதல்ளைக் கொண்டது. அந்த கோட்பாட்டின்படி, ‘இல்லாதவர்கள்’ மேலோங்க வேண்டும். இந்த யோசனை வைரஸாக பரவுகிறது. இந்த மாதிரியானது வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையேயும் அதற்குள்ளும் பிளவுகளை உருவாக்கியது. இது சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டியது” என்று பேசினார்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இக்கருத்துக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், ”ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே! ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது… புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


























