விசிக தலைவர் திருமாவளவனை மரியாதை நிமித்தமாக பாஜக முன்னாள் உறுப்பினர் காயத்ரி ரகுராம் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இந்நிலையில் பாஜக பிரமுகர்கள் சிலர் பெண்கள் குறித்து இழிவாகப் பேசியிருந்ததை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி அவரை பாஜக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் சஸ்பெண்ட் செய்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
இதைத் தொடர்ந்து, தான் தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து வேறு கட்சிகளில் சேர அழைப்பு விடுத்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது! வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மாரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இச்சந்திப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன், ”கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராம் அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தோம். ஏப்-14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்கவிருக்கும் சக்தியாத்ரா வெற்றிபெற வாழ்த்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவில் இருந்த சமயம் தொடர்ந்து திருமாவளவனை சீண்டி வந்தவர் காயத்ரி ரகுராம். மனுதர்மம் குறித்து ஒருமுறை திருமாவளவன் சர்ச்சையான வகையில் பேசியிருந்த சமயம், அதற்கு எதிர்க்கருத்தாக, ”என்ன மிஸ்டர் திருமா? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நடிகைகள் டிரஸ்ஸை கழற்றி ஆடுவார்கள் என்று சொல்கிறீர்களே.. நாங்கள் டிரஸ்களை அவிழ்த்து போட்டு ஆடுபவர்கள் இல்லை.. டிரஸ்களை கழற்றுபவர்கள் இல்லை, காலில் ஒன்னு இருக்கு.. ஞாபகம் வெச்சுக்குங்க” என்று கடுமையாக அவர் விமர்சித்திருந்தார்.
விஷயம் இப்படி இருக்க, காயத்ரி ரகுராம் திருமாவளவனைச் சந்தித்திருப்பது அவர் விசிகவில் இணைவதற்கான அறிகுறி என்று கருதப்படுகிறது. அதே போல், முன்னதாக அவர் திருமாவளவனை விமர்சித்துப் பேசியிருந்த வீடியோவும் இணையத்தில் தற்சமயம் வைரலாகி வருகிறது!


























