தனது குணத்தை பாலிவுட் திமிர் என்று கூறியதாகவும், ஆனால் தமிழ் சினிமா தன்னை ஏற்றுக்கொண்டதாகவும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியில் ’கேங்ஸ்டர்’ திரைப்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான கங்கணா ரணாவத், தமிழில் ’தாம் தூம்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்துவரும் அவர், அண்மையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’தலைவி’யில் நடித்தார். தற்சமயம் பி.வாசு இயக்கும் ’சந்திரமுகி 2’ படத்தில் நடித்துவருகிறார்.
நடிப்புத் திறமையின் மூலமாக பல்வேறு விருதுகளை வென்று குவித்துள்ள கங்கணா ரணாவத், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது தொடர்கதை. மத்திய ஆளும் அரசை இவர் ஆதரித்து அவ்வப்போது பேசுவதும், ட்வீட் செய்வதும் வைரலாகி கடும் ஆட்சேபனைகளுக்கு உள்ளாகும். ஆயினும் எதையும் பொருட்படுத்தாமல் தனது கருத்துகளை அவர் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ட்விட்டரில் ’சந்திரமுகி 2’ பட படப்பிடிப்பின்போது மதிய உணவு இடைவெளியில் ரசிகர்களை கேள்வி கேட்கச்சொல்லி அவற்றிற்கு விடையளித்த கங்கணா, தமிழ் சினிமா குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்துள்ள விடை தற்சமயம் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ட்விட்டரில் ரசிகர் ஒருவர் அவரிடம், தமிழ் சினிமாவில் நடித்தது குறித்த அனுபவம் பற்றியும், இந்தி சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு விடையளித்துள்ள அவர், ”சந்திரமுகி 2 எனக்கு தமிழில் 3வது படம். அவர்கள் என்னிடம் நான் அமைதியாக, மற்றவர்களிடம் பேசாமல் என்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இந்த குணங்களுக்காகவே பாலிவுட்டில் நான் திமிர்பிடித்தவள் என்று கூறப்பட்டேன்” என்று நெத்தியடியாக வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளார். கங்கணாவின் இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


























