லெஜண்ட் சரவணா காஷ்மீரில் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் ஒருவேளை இருக்குமோ மோடில் அதைப் பிரித்து பேன் பார்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடை விளம்பரப்படங்கள் மூலம் மக்களிடையே பிரபலமானவர் அதன் உரிமையாளரான சரவணன். இவர் நடித்து, தயாரித்து அண்மையில் வெளியான திரைப்படம் தி லெஜண்ட்.
வசதி வாய்ப்புகளுக்கு கொஞ்சமும் பஞ்சமேயில்லையென்றாலும் நடிப்பின் மீது தீராத ஆசை வைத்திருந்த லெஜண்ட் சரவணன் விளம்பரப்படங்களில் முதலில் நடித்து, அதனைத் தொடர்ந்து லெஜண்ட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
தொழிலில் வெற்றிபெற்ற அளவுக்கு சினிமாவில் அவரால் பெரிய வெற்றியை பெறமுடியவில்லை என்றுதான் கூறவேண்டும். செயற்கையான அவரது நடிப்பும், ரோபோ அசைவுகள் போன்ற அவரது நடனமும் மக்களால் கேலிசெய்யப்பட்டதே தவிர ரசிக்கப்படவில்லை. லெஜண்ட் படம் தொழில் நுட்ப ரீதியாக நல்ல படமாக வெலிவந்திருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாதது மற்றும் மோசமான அவரது நடிப்பு போன்ற காரணங்களால் சோபிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக லெஜண்ட் அடுத்த படத்தில் நடிப்பாரா இல்லையா என்ற சந்தேகம் அவரைக் கலாய்க்கும் அவரது ரசிகர்களிடையே மிகைத்திருந்தது. இந்நிலையில், அவர் காஷ்மீரில் இருப்பதாக வெளியிட்டுள்ள வீடியோ பல்வேறு ஊகங்களை நெட்டிசன்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்து உருவாகிவரும் திரைப்படம் லியோ. அண்மையில் இதன் டைட்டில் வீடியோ வெளியாகியிருந்த நிலையில், இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவருகிறது.
இதனிடையே, காஷ்மீரில் இருந்தவாறு லெஜண்ட் சரவணா வீடியோ வெளியிட்டிருப்பதால் லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் காஷ்மீர் சென்றுள்ளாரா? என்று சினிமா விரும்பிகளால் சந்தேகிக்கப்படுகிறது. ஏதேனும் சிறப்புத் தோற்றத்தில் லெஜண்ட் சரவணா லியோ படத்தில் நடிக்கிறாரா என்ற ஊகங்கள் இணையத்தில் றெக்கை கட்டிப் பறந்தவண்ணம் உள்ளன. ஆயினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை இது நடக்கும் பட்சத்தில் ஒரு வித்தியாசமான லெஜண்ட் சரவணாவை மக்களால் காணமுடியும் என்பது இணையவாசிகளின் கருத்தாக உள்ளது. எதுவாயினும் அதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


























