ஆர்.ஆர்.ஆர். படத்தின் தொப்பி அணிந்த காட்சி ஒன்றை வெளியிட்ட காரணத்திற்காக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தன்னை மிரட்டியதாக ராஜமெளலி அதிர்ச்சித் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் இந்திய சுதந்திரப் போராட்ட வீர்ர்களான அல்லுரி சீதாரமராஜு மற்றும் கொமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை கற்பனை கலந்த கதையாகக் கொண்டுவெளியானது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் 1,200 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியது.
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை ஷங்கர் பெற்றுள்ளது போலவே தெலுங்கில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பெயர்பெற்றவர் ராஜமெளலி. இவரது இயக்கத்தில் நான் ஈ, மகதீரா, பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள், ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்கள் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகி ஹிட்டடித்துள்ளன.
வித்தியாசமான, பிரம்மாண்ட வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மூலம் காண்போரின் கண்களுக்கு விருந்து படைத்தாலும், இவர் படங்களின் கதைகளில் இந்துத்துவாவின் வாசனை சற்று தூக்கலாக இருப்பதாக அவ்வப்பொழுது விமர்சனங்கள் எழும். இதனால் இந்துத்துவக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் கதையமைப்புகளால் ராஜமெளலி பாஜகவைச் சேர்ந்தவர் என்றும் சிலசமயம் வசைபாடப்படுவதுண்டு.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தன்னை எரித்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார் என்று அதிர்ச்சிகரத் தகவல் ஒன்றை ராஜமெளலி தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த அவர், ”ஆர்.ஆர்.ஆர். பட்த்தில் கோமராம் பீமாக நடித்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். முஸ்லிம்களை போன்றே தொப்பி அணிந்திருப்பார். அவ்வாறான ஒரு புகைப்படத்தை நான் வெளியிட்டேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த ஒருவர் அந்தக் காட்சியை நீக்கவில்லையெனில் என்னை எரித்துக் கொன்றுவிடுவதாக மிரட்டினார். நான் பாஜக ஆதரவாளரா என்று இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று பகீர் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.


























