இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”எச்.ராஜா பத்திரிக்கையாளர்களை சகட்டுமேனிக்கு பேசுகிறார். அரசியல் தலைவர்களை பற்றி பேசுகிறார். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். அத்து மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா பிரச்சினையில் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
எச். ராஜா மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாகவும், காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசினார் என்றும் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கும் இன்னும் முடிந்தபாடில்லை. ஆகவே நாட்டு நலன் கருதி எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் பிரதமர் என்பவர், நாட்டிற்கு சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர், மக்களின் வரி பணத்திலிருந்து தான், தனி அலுவலகம், தனி வீடு, போக்குவரத்து, பாதுகாப்பு, ஏற்பாடு அனைத்துமே என மக்களின் வரி பணத்தில் இருந்து தான் அரசு செய்து கொடுக்கின்றது, மிகப்பெரிய பொறுப்பில் இருக்க கூடிய பிரதமர் பெயரால், ஒரு குழு அமைத்து நிதி வசூல் செய்யபடுகிறது, வசூல் செய்யப்படும் நிதி அரசாங்க கணக்கிற்கு வராது, அது தணிக்கைக்கு உட்பட்டது அல்ல என அறிவிப்பதும் இது தனிநபர் செய்யும் மோசடியை விட மோசமன மோசடி.
பல ஆயிரம் கோடி ரூபாய் பி.எம். கேர் பண்டிற்கு பணம் வந்துள்ளது, யாரிடமிருந்து வந்தது, எப்படி வந்தது என்பது தெரியாது, இதுவரை வந்த மொத்த பணம் எவ்வளவு, எவ்வளவு செலவு செய்யபட்டிருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது, பிரதமர் தலமையில் அமைக்கப்பட்ட குழுவே இப்படிபட்ட மோசிடியை செய்தால், இதற்கு பெயர் என்னவென்றே தெரியவில்லை.
பி.எம். கேர் பண்டில் சேர்ந்திருக்கும் பணம் அனைத்தும் அரசாங்க கஜானாவில் சேர்க்கபடவேண்டும், சட்டபூர்வாமாக தணிக்கை செய்து, எங்கிருந்து எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு செலவு செய்யபட்டிருக்கிறது, மீதம் எவ்வளவு இருக்கிறது என்பதை வெளிப்படையாக, பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு கூறினார் முத்தரசன்.
























