பீஸ்ட் படத்துக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்துக்கு தமன் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆறாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. 2022ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிப்பள்ளியுடன் விஜய் இணைகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. இத்திரைப்படத்தை முன்னணி தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்தின் படக்குழு அறிவிக்கப்படாத நிலையில் தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. பாய்ஸ் படத்தில் நடித்த தமன், தமிழில் ‘ஈரம்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழை விட தெலுங்கு சினிமாவில் அவர் பெரும் பங்களிப்பை ஆற்றி வருகிறார். ஆகவே தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்திருக்கும் தமன் தமிழுக்கும் பரிட்சயமானவர் என்பதால் இந்த இருமொழி திரைப்படத்துக்கு தமனை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
























