ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில் வழக்கத்துக்கு மாறாக செவ்வாய்க்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. மதியம் 3.30க்கு தொடங்கும் போட்டியில் டெல்லி – கொல்கத்தா அணிகளும், 07.30க்குத் தொடங்கும் போட்டியில் மும்பை- பஞ்சாப் அணிகளும் மோதவிருக்கின்றன.
ஐபிஎல்-ஐ பொறுத்தவரை சனி, ஞாயிறு மட்டுமே ஒரே நாளில் இரண்டு நடைபெறும். ஆனால், விரைவில் டி20 உலகக்கோப்பை நடைபெறவிருப்பதால் விரைவில் ஐபிஎல் போட்டிகளை முடிக்கும் பொருட்டு செவ்வாய்க்கிழமையே இரண்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்று மோதும் அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைத் தவிர மற்ற மூன்று அணிகளுக்குமே இது மிக மிக முக்கியமான போட்டியாக இருக்கும்.
இதுவரை எட்டு அணிகளுக்கும் தலா 10 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இதைத் தவிர்த்து இன்று மோதவிருக்கும் பஞ்சாப், மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளுமே 8 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. ப்ளே ஆஃப் செல்வதற்கான முனைப்பு இம்மூன்று அணிகளுக்கு மிக அதிகமாக இருக்கும் என்பதால் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
டெல்லி – கொல்கத்தா போட்டியைப் பொறுத்த வரை யார் வெல்வார்கள் என்பதை யூகிக்க முடியாதபடி உள்ளது. ஏப்ரலில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பெரிதும் சோபிக்காத கொல்கத்தா அணி இரண்டாம் கட்ட போட்டிகளில் நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறது. சுக்மன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ராகுல் திரிபாதி போன்ற பேட்ஸ்மேன்களும், சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி பெர்க்குசன் போன்ற பவுலர்களும் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள். ஆண்ட்ரூ ரசல் போன்ற ஆல்ரவுண்டரும் உள்ளதால் அணி மிக வலுவாக உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி பத்து போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வியடைந்திருக்கிறது. ரிஷப் பண்ட் தலைமையிலான அந்த அணியும் நல்ல ஃபார்மில் இருப்பதால் யார் வெல்லப்போகிறார்கள் என்கிற த்ரில் ரசிகர்களுக்கு இருக்கிறது.

மும்பை – பஞ்சாப் இடையிலான போட்டியிலும் இருவருக்குமே சம வாய்ப்புகள் உள்ளன. இதற்கும் முன் பஞ்சாப் – மும்பை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி மும்பை அணியை வீழ்த்தியிருக்கிறது. மும்பை அணியில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்திருக்கிறது. பஞ்சாப் அணி ஹைதராபாத்துடன் மோதிய கடைசிப் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடும் நம்பிக்கயோடும் விளையாட வருகிறது. ஹாட்ரிக் தோல்வியால் சோர்ந்திருக்கும் மும்பை அணி கட்டாயம் வென்றே ஆக வேண்டிய மூர்க்கத்துடன் வரும் என்பதால் இப்போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
























