கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் வரிசைகட்டி படங்கள் வெளியாகவிருக்கின்றன. இனி வெளியாகவுள்ள படங்கள் குறித்த சிறு அறிமுகத்தைக் காண்போம்.
செப்டம்பர் 30, சிவகுமாரின் சபதம்

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நாயகனாகவும் நடிப்பவர். அவரது முதல் படமான ‘மீசைய முறுக்கு’ வணிக ரீதியாக வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் படங்களில் நடித்தார். அதற்கடுத்து அவர் நடித்து இயக்கியுள்ள திரைப்படம்தான் சிவகுமாரின் சபதம். ஹிப் ஹாப் ஆதிக்கென தனியே ரசிகப் பரப்பு இருக்கிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் விதமாகவே அவரது படங்கள் இருக்கின்றன. சிவகுமாரின் சபதம் ட்ரெய்லர் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆகவே இப்படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 1, ராஜவம்சம்

இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் இயக்குநர் எம்.சசிக்குமார் நடித்துள்ள திரைப்படம்தான் ராஜவம்சம். சசிக்குமார் படங்கள் பொதுவாக குடும்பப் பார்வையாளர்களைக் கவர்வதாகவே இருக்கும். இத்திரைப்படமும் குடும்பக் கதைக்களத்தைக் கொண்டு தயாராகியிருப்பதால் குடும்பமாக செல்லும் பார்வையாளர்களைக் கவர்வதாக இருக்கும். நிக்கி கல்ராணி நாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராதாரவி, தம்பி ராமய்யா, விஜயகுமார், யோகி பாபு உள்ளிட்ட பெரும்பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறது.
அக்டோபர் 1, லிஃப்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பரவலாக அறியப்பட்ட கவின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் லிஃப்ட். அக்டோபர் 1ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இப்படம் வெளியாகவிருக்கிறது. பிகில் படத்தில் தென்றலாக நடித்திருந்த அம்ரிதா இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்திரன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்.
அக்டோபர் 9, டாக்டர்

கோலமாவு கோகிலா திரைப்பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போய் இப்போது அக்டோபர் 9ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியது. உடல் உறுப்புத் திருட்டு, பெண் கடத்தல் போன்றவற்றை மையப்படுத்திய கதை என்பதை யூகிக்கும் வண்ணம் ட்ரெய்லர் இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் நிச்சயம் நகைச்சுவைக்குக் குறைவிருக்காது என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
அக்டோபர் 13, அரண்மனை 3

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் அரண்மனை. அந்த வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை 2 படத்தை இயக்கி அதுவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அரண்மனை படத்தின் மூன்றாவது பாகம் தயாராகியிருக்கிறது. ஆர்யா – ராஷிகண்ணா ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படமும் முந்தைய பாகங்களைப் போன்றிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. ஆண்ட்ரியா, சம்பத், யோகி பாபு போன்று பெரும் பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர். பேய்ப்படம் என்றாலும் சுந்தர்.சி தனது ஸ்டைலில் கலகலப்பு மிகுந்த படமாக எடுப்பார். நல்ல எண்டெர்டெய்னராக இத்திரைப்படம் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
அக்டோபர் 14, எனிமி

விஷால் – ஆர்யா ஆகிய இருவரது நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம்தான் எனிமி. பெரிய பட்ஜெட்டில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மிர்னாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் விஷாலும் ஆர்யாவும் மோதிக்கொள்வது போலான கதையாக இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இப்படம் வெளியாகிறது.
























