6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மதியம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். முதற்கட்டமாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி ஆலோசிக்கப்படவிருக்கிறது. அக்டோபர் 31 வரை தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் பள்ளிகள் திறக்கப்படுவது மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் வழிபாட்டுத் தலங்கள் இயங்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
























