தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி ரமணா, கூடுதல் அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையத்துக்கு தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தினார். மேலும், ”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் ஏன் செயல்படுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். ”தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதலாக ஒருநாள் கூட அவகாசம் வழங்க முடியாது” என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
























